Vaigai Express
Note: This article is written in Tamil. It was originally published on 10.11.2019.
1990s… அப்போ லால்குடில St. Anne’s ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். எல்.கே.ஜில இருந்து ஐந்தாவது வரைக்கும் அங்கதான். அந்தச் சின்ன ஊர்ல ஓரளவுக்கு மீடியம் ரேஞ்ச் ஸ்கூல். நல்ல டீச்சர்ஸ். அங்க இருந்த பெரும்பாலான டீச்சர்ஸ் என்னோட பாட்டியோட மாணவர்களா இருந்ததால ஸ்கூல்ல நமக்கு கொஞ்சம் செல்லம் அதிகம். தினமும் வீட்ல இருந்து, பிடிச்ச டீச்சர்களுக்கு ரோஜா பூ பறிச்சுட்டு கொண்டு போய் கொடுப்பேன். அந்த வயசுக்கேத்த அனுபவங்களோட இருந்த டைம் அது.
எல்லா சின்ன ஊர்களுக்கும் ரயில்வே கேட் ஒரு ஸ்பெஷலான இடம். ரயில் பாதை கரெக்ட்டா ஊருக்கு நடுவுல போகும். ஊரைத் தாண்டி இருக்க ஒரு குக்கிராமத்துக்குப் போக, நாளுக்கு ரெண்டு தடவை மட்டுமே வரும் டவுன் பஸ் கரெக்ட்டா கேட்ல எப்பவும் சிக்கி நிக்கும். அப்பப்போ சில ட்ராக்டர்கள்.. ஒரு ஸ்கூல் பஸ். ஸ்பீடு பிரேக்கரில் ஏற முடியாமல் தவிக்கும் பியாஜியோ வண்டிகள், சில காய்கறி ஆட்டோக்கள், வாடகை சைக்கிள்கள், ப்ராய்லர்களுடன் டி.வி.எஸ் 50க்கள்னு எல்லாம் சந்திக்கும் இடம் ரயில்வே கேட்டுகள்தான்.
இப்படி லால்குடிலயும் ஒரு ரயில்வே கேட் இருந்தது. இந்த கேட்டைத்தாண்டிதான் லால்குடி பஸ் ஸ்டாண்டுக்குப் போக முடியும். கேட்டுக்கு இந்தாண்டதான் லால்குடி மெயின் ஏரியா. மூணு கிமீ தாண்டினா கொள்ளிடம், கூகூர். எனக்கு பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஸ்கூல். மூணாவது வரைக்கும் குதிரை வண்டியிலதான் போனேன். ரயில்வே கேட்டுக்குப் பக்கத்திலயே கறிக்கடை வச்சிருந்த பாய்தான் நம்ம குதிரை வண்டிக்கும் டிரைவர். நாலாவது கிளாஸ் முழுக்க ஸ்கூலுக்கு நடந்து… ஐந்தாவது படிக்கும்போது சைக்கிள்னு நினைக்கிறேன்.
எப்படி வந்தாலும் காலைல ஸ்கூலுக்குப் போகும்போது கரெக்ட்டா 9:30 மணி வைகை எக்ஸ்பிரஸுக்கான கேட்ல சிக்குவோம். இந்த கேட்ல சிக்கினா, அடுத்து காட்டூர்ல நிக்குற 10 மணி கடலூர் - திருச்சி பேசஞ்சரும் க்ராஸ் பண்ண பிறகுதான் சில நாள் கேட்ட திறப்பாங்க. அதனால மொத்த லால்குடியும் இந்த கேட்ல இருந்து தப்பிக்க ட்ரை பண்ணுவாங்க. ஆனா, தினமும் வைகை எக்ஸ்பிரஸ் கேட்ல மாட்டணும்னு நினைச்சுக்கிட்டே வருவேன். ஏன்னா.. அந்த டீசல் லோக்கோமோட்டிவ் இன்ஜின்!

GOC’s WDM-3A - Source: Infinite Rails Studio 2018
வைகை எக்ஸ்பிரஸ் இன்ஜின் ஹாரன் சத்தம் மட்டும்தான் மொத்த லால்குடிக்கும் 9:30 அலாரம். பஸ் ஸ்டாண்ட் பக்கம் இதே நேரம், ‘வைகையே வந்துட்டான்.. இந்த தர்மராஜ் பஸ்காரன் இன்னும் பூவாளூரையே தாண்டிருக்க மாட்டான் போல’ன்னு பேசிக்கொண்டிருப்பார்கள். வைகை எக்ஸ்பிரஸ் இன்ஜின் அப்போது பொன்மலை ஷெட் GOC WDM-3A மாடல் என நினைக்கிறேன். வைகை எக்ஸ்பிரஸ் ஹாரன் சத்தம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். லால்குடி ரயில்வே லைன்ல என்ன ஸ்பெஷல்னா கிட்டத்தட்ட அஞ்சு கிலோமீட்டருக்கு நேர்கோட்ல இருக்கும். லால்குடி ஸ்டேஷன் தாண்டி ஒரு கி.மீலதான் அடுத்த வளைவு இருக்கும். அதனால், எந்த எக்ஸ்பிரஸ் ட்ரெய்னும் லால்குடி கேட்டை தாண்டும்போது ஃபுல் ஸ்பீடுல வரும். இந்த ஸ்பெஷல் ஹாரனோட சத்தம், மாந்துறை தாண்டும்போதே லேசா லால்குடி கேட்ல கேக்கும். அடுத்த சில நிமிஷங்கள்ல அந்த V16 இன்ஜினோட 16 சிலிண்டர்களும் செம்ம ஃபார்ம்ல இருக்க, ஏதோ குட்டி ஃபேக்டரியே வேகமா வர்ற மாதிரி, அந்த இன்ஜின் மெக்கானிக்கல் சத்தங்கள் மட்டும் எக்கோ அடிக்க ஆரம்பிக்கும். கேட் கீழ குனிஞ்சு போய் ட்ராக் பக்கத்துல நின்னு பார்த்தா தூரத்துல ஒரு புள்ளி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கிட்ட வர்ற, ரயில் ட்ராக்ல நெறிக்கிற மாதிரி சத்தங்கள் வர ஆரம்பிக்கும். லால்குடி ஸ்டேஷன் கிட்ட இன்ஜின் வரும்போது, சைடுல முழுக்கவும் புழுதியை வாரிக் கெளப்பிட்டு ஒரு ஃபைனல் ஹாரன் அடிக்க.. ட்ரெய்னை வேடிக்க பார்க்க, குதிரை வண்டியில இருந்து இறங்கி வந்த எங்க எல்லோரையும் கேட் கீப்பர் விரட்டுவார். அடுத்த ஒரு நொடிதான்… கண்ண மூடித் திறக்கறதுக்குள்ள கரெக்ட்டா ட்ராக்ல ஒரு ஹாரன் அடிச்சுட்டு… புயல் மாதிரி வைகை எக்ஸ்பிரஸ் கடக்க… காத்து, புழுதியெல்லாம் உடம்பை ட்ரெயின் பக்கம் இழுக்க... அந்த கார்டு பேட்டி கடக்கும்போது வர்ற அந்த தனி ‘டடக் டடக்’ சத்தம் கேக்குற வரைக்கும் கேட்டை ஒட்டிக்கிட்டு நிப்போம். இன்னும் 10 நொடி நின்னா, தூரத்துல முழு வேகத்துலேயே அந்த வளைவை எல்லா கோச்சுகளும் கடப்பதைப் பார்க்கலாம்.

The work on construction of the railway bridge at Lalgudi began in 2010 Photo: A. Muralitharan - The Hindu
என்னைக்காவது ஹோம்வொர்க் முடிக்கலன்னா லால்குடி ரயில்வே ஸ்டேஷன் பெஞ்ச்ல போய் உட்கார்ந்துக்குவேன். அவ்வளவு மரங்களும், கிளிகளும் அமைதியும்னு இன்னிக்கும் எனக்கு அது கோயில் மாதிரி. வைகை எக்ஸ்பிரஸ் போகும்., அடுத்த சில நிமிஷங்கள்ல பாசஞ்சர் வர்றதுக்குள்ள மீதி ஹோம்வொர்க் முடிச்சுட்டு, ஸ்கூலுக்கு நடந்து போய் லேட்டா வந்ததுக்கு மட்டும் திட்டு வாங்குவேன். கோவைல ஸ்கூல் சேர்ந்ததுக்கப்புறம் மூணு மாசத்துக்கொரு தரம் தான் லால்குடிக்கு வருவோம். ஒவ்வொரு தடவையும் காலைல எட்டு மணிக்கு சைக்கிள் எடுத்துட்டு வந்து, ஸ்டேஷன்ல போட்டுட்டு பிளாட்ஃபார்ம்ல வாக்கிங். இந்த ஒரே டைம்ல மட்டும்தான் ரெண்டு பாசஞ்சர் ட்ரெய்னுக்கு லால்குடி க்ராஸிங் பாயின்ட். ரெண்டு இன்ஜின்களையும் பார்த்துட்டு வீட்டுக்குப் போறது ஒரு சடங்காவே இருந்த காலம் அது. திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தா, கடைசி ரெண்டு ப்ளாட்ஃபாரம்கள்ல டீசல் இன்ஜின்களை அடிக்கடி ஐடில்ல பார்க்கலாம். மணிக்கணக்கா ஐடில்லயே இருக்கும். இந்த டீசல் ரயில் இன்ஜின்களின் ஐடில் ரிதமே ஒரு தனி மியூஸிக்தான். அப்பப்போ கம்ப்ரஸர் ஆன் ஆகி ஆஃப் ஆக, RPM அப்பப்போ ஏறி ஏறி இறங்கும். ஏதோ உயிருள்ள விஷயத்தின் இதயத்துடிப்பைப் போன்ற அற்புதமான ரிதம் அது.
இதெல்லாம் 90s கிட்ஸ்களோட முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். இப்போ வைகை எக்ஸ்பிரஸுக்கு ராயபுரம் ஷெட் WAP7 எலெக்ட்ரிக் இன்ஜின். இது வந்தாலும், போனாலும் சத்தமும் கேக்காது. இன்ஜின் ரிதமும் கிடையாது. எல்லா எலெக்ட்ரிக் லோக்கோமோட்டிவ்லயும் ஒரே மாதிரி டல் சத்தம்தான். திருச்சி ஸ்டேஷன்லயும் இப்பொதெல்லாம் டீசல் இன்ஜின்களைப் பார்க்க முடிவதில்லை. சத்தமே இல்லாமல் டல்லா இருக்கிறது எப்போதும்!
WDM3A போன்ற ALCO ரக இன்ஜின்களை ரசிக்கும் வாய்ப்புகள் எல்லாம் இந்தக்கால குட்டி ரயில்ஃபேன்களுக்கு கிடைப்பதில்லை….
அந்த லால்குடி ரயில்வே கேட்டும் இப்போது இல்லை… மேம்பாலம் கட்டியாச்சு!
இப்போலாம் எல்லாரும் எல்லா இடத்துக்கும் சீக்கிரமா போக ஆரம்பிச்சுட்டாங்க.. வழியில் எதையும் ரசிக்காமலேயே!